மாணவனை பிரம்பால் அடித்ததால் ஆத்திரம் - ஆசிரியரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு
பள்ளியில் மாணவனை ஆசிரியர் பிரம்பால் அடித்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பொதுமக்கள் ஆசிரியரை கடுமையாக தாக்கினர். இதனால் பள்ளியில் பரபரப்பு நிலவியது.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகை அரசினர் உயர் நிலைப் பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் இங்கு 6-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை அந்த பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை செய்து வரும் மோகன் (வயது 36) பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் மாணவனுக்கு கை மற்றும் கால்கள் வீங்கியது. ஆனால் மாணவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பாமல் பள்ளியில் வைத்து வீக்கத்திற்கு ஆசிரியர்கள் ஜஸ் ஒத்தடம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் நடந்த சம்பவம் குறித்து வீட்டில் யாருக்கும் சொல்ல வேண்டாம் என ஆசிரியர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் மாணவன் பெற்றோர்களிடம் இதுகுறித்து தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலையில் மாணவனுக்கு கை, கால்கள் வீங்கி இருப்பதை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாணவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இது தொடர்பாக விசாரிக்கையில் மாணவன் தன்னை ஆசிரியர் தாக்கியதாக தெரிவித்தார். உடனே பள்ளிக்கு சென்ற பெற்றோர் சென்றனர். சம்பவத்தை கேள்விப்பட்ட உறவினர்கள், பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் பள்ளியில் திரண்டனர். இதனையடுத்து பள்ளி தலைமையாசிரியர் சம்பவம் தொடர்பாக ஆசிரியர் மோகனை அழைத்து நடந்தவற்றை கேட்டு கொண்டு இருந்தார். அப்போது ஆத்திரமடைந்த பொதுமக்கள், உறவினர்கள் ஆசிரியர் மோகனை கடுமையாக தாக்கினர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆசிரியர் மோகனை மீட்டு உறவினர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். காயம் அடைந்த ஆசிரியர் மோகன், சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையடுத்தது அரசு பள்ளியில் நேற்று மாலை பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் வைலட் மேரி இசபெல்லா நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.