வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா - புகைப்படத்தொகுப்பு


தினத்தந்தி 8 Sept 2022 10:39 AM IST (Updated: 8 Sept 2022 4:12 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாகப்பட்டினம்,

இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மீக சுற்றுலா தலமாக விளங்குகிறது.

இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆண்டுத் திருவிழா கொண்டாடப்படும். வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 8-ந்தேதி நடைபெறும். இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டு செல்வார்கள்.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா கடந்த மாதம் ஆகஸ்ட் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் பிரதான நிகழ்ச்சியான மாதா பெரிய தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. திருப்பலியை தொடர்ந்து தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தேரை புனிதம் செய்தார்.

இதையடுத்து இரவு 8 மணிக்கு பேராலயத்தின் மணிகள் ஒழிக்க மின்விளக்கு மலர் அலங்காரத்துடன் தயார் நிலையில் இருந்த புனித ஆரோக்கிய மாதா சொரூபம் தாங்கிய பெரியதேர் பேராலய முகப்பிலிருந்து புறப்பட்டு சென்றது. தேர் புறப்பட்டதும் பேராலயத்தை சுற்றி திரண்டு இருந்த பக்தர்கள் உற்சாக மிகுதியில் கைதட்டி 'மரியே வாழ்க' என கோஷமிட்டு பிரார்த்தனை செய்தனர். மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல் சமன்சு , புனித சூசையப்பர், புனித அந்தோனியார் , புனித செபஸ்தியார், அமலோர்பவமாதா , புனித உத்ரியமாதா ஆகிய 6 தேர்கள் வண்ண விளக்குகளில் அலங்காரங்களுடன் அணிவகுத்தன.

இந்த 7 தேர்கள் முன்பாகவும் தேரை பின்தொடர்ந்ததும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்றனர். தேர்வலம் வரும்போது பக்தர்கள் தேர் மீது பூக்களை தூவி ஜெபித்தனர். தேர்பவனி பேராலய முகப்பிற்கு வந்து சேர்ந்ததும் புனித ஆரோக்கிய மாதாவிற்கு நன்றி செலுத்தும் விதமாக பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது .


Next Story