உதவி பொறியாளர் வீடு உள்பட 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை


உதவி பொறியாளர் வீடு உள்பட 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
x

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் வீடு உள்பட 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

கரூர்

உதவி பொறியாளர்

கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் கார்த்திக் (43). இவர் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து கார்த்திக், அவரது மனைவி கவிதா மற்றும் கார்த்திக்கின் தாய் காளியம்மாள் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 7 ஆண்டுகளில் தாந்தோணி, க.பரமத்தி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியங்களில் உதவி பொறியாளராக கார்த்திக் பணியாற்றி வந்த போது வருமானத்திற்கு அதிகமாக அவரது தாய் காளியம்மாள், மனைவி கவிதா ஆகியோர் பெயரில் அசையும், அசையா சொத்துக்களை வாங்கியதாக கூறப்படுகிறது. கார்த்திக்கின் தாய் காளியம்மாள் கடந்த 2006-11-ம் ஆண்டில் இனாம்கரூர் நகராட்சியிலும், 2011-16-ம் ஆண்டில் கரூர் நகராட்சியில் அ.தி.மு.க. வார்டு உறுப்பினராகவும் இருந்தவர். கார்த்திக்கின் மனைவி கவிதா தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

வழக்குப்பதிவு

இதில், விசாரணை செய்யப்பட்ட காலக்கட்டத்தில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ரூ.1 கோடியே 49 லட்சத்து 91 ஆயிரத்து 62 இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், கார்த்திக், அவரது மனைவி கவிதா மற்றும் தாய் காளியம்மாள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக 66 சதவீதம் சொத்து சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சோதனை

இந்நிலையில் கரூர் மாவட்டம் புகழூர் டி.என்.பி.எல். சிமெண்டு ஆலை அருகே உள்ள மூலிமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கார்த்திக்கின் மாமனார் ராமலிங்கம் வீட்டிற்கு நேற்று காலையில் வந்த மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வீடு முழுவதும் சோதனை மேற்கொண்டனர். ஆனால் அவரது மாமனார் வீட்டில் இருந்து ஏதாவது ஆவணங்கள் எடுத்துச் சென்றுள்ளனரா என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்து கரூர் வெங்கமேடு குமரன் நகரில் உள்ள கார்த்திக் வீடு, சின்னகுளத்துபாளையத்தில் உள்ள அவரது தாய் காளியம்மாள் வீடு ஆகிய இடங்களிலும் கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது.


Next Story