குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் ஆய்வு
குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக அருண் பொறுப்பேற்றதில் இருந்து பொது வினியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை வாங்கி பதுக்கல் மற்றும் கடத்தல் சம்பந்தமான குற்றங்கள் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்கள், விவசாயிகளிடம் போதுமான ஆவணங்களை பெற்றுக்கொண்டு மட்டும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளை காக்க வைக்கக்கூடாது. அவர்களிடம் கையூட்டு பெறக்கூடாது என்றும், மேலும் வியாபாரிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என்றும் கூடுதல் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய ஓலையூர், மேக்குடி, மணிகண்டம், சேதுராப்பட்டி, நவலூர்குட்டப்பட்டு, பூங்குடி, புங்கனூர் கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள கொள்முதல் மையங்களில் முறைகேடு ஏதும் நடக்கிறதா? என்று குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். திருச்சி மண்டல குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்சனம் தலைமையில் இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று 2-வது நாளாக மேற்கொண்ட இந்த ஆய்வின்போது விவசாயிகள் கொண்டு வரும் நெல் தரமாக வருகிறதா? கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் அல்லாமல் வியாபாரிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். பின்னர் அங்குள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி, முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர்.