அதிக வனவிலங்குகள் வாழும் பகுதியான ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகம்


அதிக வனவிலங்குகள் வாழும் பகுதியான ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சுற்றுலா தலமாக மேம்படுத்த ேவண்டும்.

விருதுநகர்

கடந்த 26.12.1988-ம் ஆண்டு தமிழக அரசு ஸ்ரீவில்லிபுத்தூரை தலைமை இடமாக கொண்டு சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தை அறிவித்தது. இங்கு சாம்பல் நிற அணில்கள், காட்டெருமை, யானை, மான், கரடி, சிங்கவால் குரங்குகள், காட்டுப்பன்றிகள், புள்ளி மான்கள், வரையாடுகள் உள்ளன.

இந்த பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிக அளவு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சிறுத்தைகள் மற்றும் புலிகளை பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வந்தன. மேலும் தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதி, ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணிகள் சரணாலயத்தையும் இணைத்து புலிகள் காப்பகம் உருவாக்க வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தையும், மேகமலை வன உயிரின சரணாலயத்தையும் இணைத்து, நாட்டின் 51-வது புலிகள் காப்பகமாக 8.2.2021-ல் மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் தற்போது மேகமலை புலிகள் காப்பகமாக மாறி உள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், மதுரை மாவட்டத்தில் பேரையூர், உசிலம்பட்டி, தேனியில் உத்தமபாளையம், ஆண்டிபட்டி தாலுகாக்களையும் வனத்துறையின் மேகமலை, ஸ்ரீவில்லிபுத்துார் வனச் சரகத்திற்கும் கட்டுப்பட்ட பகுதியில் இந்த சரணாலயம் அமைகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி இங்கு சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த வனப்பகுதியை பொதுமக்கள் பார்வையிட தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

வனப்பகுதிக்குள் செல்ல தடை

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார் கூறுகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் தற்போது சிறுத்தை மற்றும் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதி மிகுந்த அடர்ந்த வனப்பகுதியாகும். இந்தியாவில் இங்கு தான் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிக அளவு வனவிலங்குகள் வசிக்கும் இடமாக உள்ளது. வனப்பகுதிகளுக்குள் யாரும் நுழையக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. வனபகுதிக்குள் நுழையும் பகுதிகளில் வனத்துறை சார்பில் சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கப்படுகிறது என்றார்.

பாதுகாப்பை அதிகரிக்கலாம்

சமூக ஆர்வலர் ஆல்வின் சீதனா கூறியதாவது:-

ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மலை பகுதிகளை இணைத்து மேகமலை புலிகள் காப்பகமாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இருப்பினும் இந்த பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுவதுடன், சுற்றுலா பயணிகள் மூலம் வருவாய் கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும். மேலும் வனப்பகுதியில் இருந்து விலங்குகள் வெளியேறி விவசாய நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இது விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. வனப்பகுதிகளுக்குள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும், தீவிரவாத செயல்களை தடுக்கும் வகையிலும் வனத்துறையினரின் எண்ணிக்கையை அதிகரித்து பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்.


அரிய வகை அணில்கள்

வன உயிரின ஆர்வலர் மோகன்குமார் கூறுகையில், சாம்பல் நிற அணில்கள் உலகில் வேறு எந்த பகுதியிலும் காண முடியாத ஒரு அரிய வகையாகும். புலிகள் காப்பகம் அமைந்த பின்பு சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தை பொதுமக்கள் பார்க்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தை பொதுமக்கள் பார்ப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டியது அவசியமாகும்.


முதல்முறையாக மோப்ப நாய்கள்

போலீஸ்துறையில் தான் மோப்பநாய்கள் இருக்கும். இந்தநிலையில் வனப்பகுதிகளை பாதுகாக்கவும், வனப்பகுதிகளுக்குள் தீவிரவாத செயல்களை தடுக்கும் வகையிலும் வனத்துறை சார்பில் தமிழகத்தில் முதன் முறையாக 2 மோப்பநாய்கள் வழங்கப்பட்டுள்ளன. வனத்துறை அதிகாரிகள் ரோந்து செல்லும் போது இந்த நாய்களையும் உடன் அழைத்து செல்வர்.


5-வது புலிகள் சரணாலயம்

தமிழகத்தில் களக்காடு, முண்டந்துறை, முதுமலை, ஆனைமலை, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயங்கள் உள்ளன. ஐந்தாவதாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உருவாகியுள்ளது. இதில் காப்புக்காடுகள் அடங்கிய பகுதி, புலிகள் வாழ்விடமாக கருதப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதியாகவும், மீதியுள்ள வனப்பகுதி காப்பகத்தின் வளர்ச்சிப்பணிகளுக்கான பகுதியாகவும் பிரிக்கப்பட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், மதுரை மாவட்டத்தில் பேரையூர், உசிலம்பட்டி, தேனியில் உத்தமபாளையம், ஆண்டிபட்டி தாலுகாக்களையும் வனத்துறையின் மேகமலை பகுதிகளில் இந்த சரணாலயம் அமைகிறது.

சிறுத்தைகள் அதிகம்

விருதுநகர், மதுரை, தேனி ஆகிய 3 மாவட்டங்களை இணைத்து புலிகள் காப்பகமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு புலி, சிறுத்தை, யானை, காட்டுமாடு, வரையாடு, புள்ளிமான், மிளா, சிங்கவால் குரங்கு, கருமந்தி, சாம்பல் நிற அணில், 250 வகையான பறவை இனங்கள், ராஜநாகம் பல்வேறு வகையான மூலிகைகள், மரங்கள் பூச்சி இனங்கள், 300 வகையான வண்ணத்துப்பூச்சிகள் போன்ற பல்வேறு வன உயிரினங்கள் வசிக்கின்றன. தமிழகத்திலேயே ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத்தில் தான் அதிக அளவு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதிலும் சிறுத்தைகள் அதிகம் காணப்படுகின்றன.

செயற்கை நீர்வீழ்ச்சி

வன்னியம்பட்டியை சேர்ந்த முருகன் கூறியதாவது:-

கேரளா அரசு, வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று வருமானம் ஈட்டுவது போல் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதிக்குள்ளும் அனுமதிக்க வேண்டும். இங்குள்ள நீர்வீழ்ச்சி, காட்டழகர் கோவில், சாம்பல் நிற அணில் ஆகியவற்றை பார்வையிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் வனத்துறைக்கு அதிக அளவு வருவாய் கிடைப்பதோடு சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகவும் அமையும். பூங்கா, செயற்கை நீர்வீழ்ச்சிகள் அமைத்து பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்.



Next Story