சேலத்துக்கு வந்த ஆசிய சாம்பியன் ஆக்கி கோப்பைக்கு உற்சாக வரவேற்பு


சேலத்துக்கு வந்த ஆசிய சாம்பியன் ஆக்கி கோப்பைக்கு உற்சாக வரவேற்பு
x

சேலத்துக்கு வந்த ஆசிய சாம்பியன் ஆக்கி கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சேலம்

ஆக்கி கோப்பை

7-வது ஹூரோ ஆசிய சாம்பியன் ஆக்கி கோப்பை போட்டி சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வருகிற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாம்பியன்ஸ் கோப்பை அறிமுக விழாவை அரசு மாவட்டந்தோறும் நடத்தி வருகிறது.

அந்த வகையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை அனைத்து மாவட்டங்களுக்கும் கோப்பையை அறிமுகப்படுத்தி உலா வரும் விழாவை 'பாஸ் தி பால் டிராபி டூர்' என்ற நிகழ்வாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி கடந்த 20-ந் தேதி தூத்துக்குடியில் நடைபெற்று பல்வேறு மாவட்டங்களின் வழியாக நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தது.

சேலம் மாவட்டத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்வை விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்), சேலம் மாவட்ட ஆக்கி சங்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்தது.

உற்சாக வரவேற்பு

இந்தநிலையில் ஆசிய சாம்பியன் கோப்பை நேற்று முன்தினம் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக்கழகத்துக்கு வந்தடைந்தது. நேற்று காலை 7 மணி அளவில் கோப்பையை ஆக்கி சங்கத்தின் செயலாளர் வெங்கடேசனிடம் இருந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) துணை தலைவர் சந்திரசேகர், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ரவிச்சந்திரன் ஆகியோர் கோப்பையை பெற்றுக்கொண்டு அதை திறந்து வைத்து அறிமுகப்படுத்தினர்.

பின்னர் சின்னங்களை அறிமுகம் செய்தனர். அப்போது மேளதாளம் முழங்கப்பட்டதுடன் பட்டாசு வெடிக்கப்பட்டு கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மரக்கன்றுகள்

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் உதவி கமிஷனர் பாபு, விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) துணைவேந்தர் சுதிர், பதிவாளர் நாகப்பன், துணை இயக்குனர்கள் ராஜன், சாமுவேல், சூரியநாராயணன், இணைப்பதிவாளர் தனசேகரன், மாவட்ட ஆக்கி சங்க தலைவர் ராபர்ட் கிறிஸ்டோபர், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், விநாயகா மிஷன்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சரவணன் மற்றும் பல்கலைக்கழக அலுவலர்கள், பேராசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் வனத்துறை சார்பில் 100 மரக்கன்றுகள் பள்ளி குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.


Next Story