கைது செய்ய வந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஆசாமி


கைது செய்ய வந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஆசாமி
x

களியக்காவிளையில் பாலியல் வழக்கில் 12 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தவரை கைது செய்ய வந்த ேபாது சப்-இன்ஸ்பெக்டர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி

களியக்காவிளை:

களியக்காவிளையில் பாலியல் வழக்கில் 12 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்தவரை கைது செய்ய வந்த ேபாது சப்-இன்ஸ்பெக்டர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

பாலியல் பலாத்கார வழக்கு

களியக்காவிளை ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது35). இவர் 2010-ம் ஆண்டு கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாறசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்டாலினை தேடி வந்தனர். இவர் போலீசாரின் பிடியில் சிக்காமல் கடந்த 12 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார். மேலும் ஸ்டாலின் மீது கஞ்சா உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் ஸ்டாலின் சொந்த ஊரான களியக்காவிளை ஆர்.சி. தெருவுக்கு வந்து செல்வதாக பாறசாலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாறசாலை சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாண், ஜிதின் ஆகியோர் தலைமையில் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

சுற்றி வளைத்து பிடித்தனர்

இந்தநிலையில் ஸ்டாலின் களியக்காவிளை இஞ்சிவிளை பகுதியில் பதுங்கி இருப்பதை தெரிந்து கொண்ட போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது ஸ்டாலின் தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அவரை சுற்றி வளைத்தனர்.

உடனே, ஸ்டாலின் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் தலையில் தாக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைபார்த்த சக போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அனைவரும் துரிதமாக செயல்பட்டு ஸ்டாலினை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவரை கைது செய்து பாறசாலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை

படுகாயமடைந்த சப்- இன்ஸ்பெக்டர் ஜாண் பாறசாலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பாலியல் வழக்கில் தொடர்புடைய ஆசாமியை பிடிக்க சென்ற இடத்தில் சப்-இன்ஸ்பெக்டர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story