வீடு புகுந்து பணம், நகையை திருடிய மர்மஆசாமிகள்
திருவட்டார் அருகே வீடு புகுந்து பணம், நகையை திருடி சென்ற மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே வீடு புகுந்து பணம், நகையை திருடி சென்ற மர்மஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
வீடு புகுந்து திருட்டு
திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் அருவிக்கரை குழிவிளையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி வின்சி (31). வின்சியின் தம்பி விஜூவும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அதிகாலை விஜூ வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து அவரை அழைத்து வருவதற்கு வின்சி, அவருடைய குழந்தைகள், தாயார் ஆகியோருடன் சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்மஆசாமிகள் அந்த வீடு புகுந்து எல்.இ.டி. டி.வி., ரூ.11,500, ¾ பவுன் நகை ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதற்கிடையே வீடு திரும்பிய வின்சி வீட்டில் திருடு போனதை கண்டு திடுக்கிட்டார். வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்மஆசாமிகள் கைவரிசை காட்டியுள்ளனர்.
போலீஸ் விசாரணை
வின்சி குடும்பத்தினருடன் வெளியே செல்வதை நன்கு தெரிந்த நபர்கள் தான் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மஆசாமிகளை தேடிவருகின்றனர்.