துணை சுகாதார நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும்
துணை சுகாதார நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும்
செண்டாங்காடு ஊராட்சியில் பராமரிப்பின்றி கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துணை சுகாதார நிலையம்
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செண்டாங்காடு ஊராட்சியில் கடந்த 1996-ம் ஆண்டு முதல் தாய் சேய் மையம் கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் கரம்பயம் ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தின் துணை சுகாதார நிலையமாக செயல்பட்டு வந்தது. 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த துணை சுகாதார நிலையத்தின் கட்டிடங்கள் தற்போது சேதமடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் இந்த துணை சுகாதார நிலையம் செண்டாங்காடு அரசு பள்ளியின் அருகில் உள்ள ஒரு அறையில் செயல்படுகிறது. எனவே பராமரிப்பின்றி கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிதாக கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலதாமதம்
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த மைனாவதி கூறியதாவது: செண்டாங்காடு, திட்டக்குடி, சூராங்காடு உள்ளிட்ட கிராமத்தில் உள்ள பொதுமக்கள் இந்த சுகாதார நிலையத்தில் வந்து சிகிச்சை பெற்று வந்தோம். இந்த சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை நடைபெற்றது. தற்போது சுகாதார நிலையம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி செயல்படாமல் காணப்படுகிறது. இதனால் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்கு கரம்பயத்திற்கோ, பட்டுக்கோட்டைக்கோ செல்வதற்கு மிகவும் காலதாமதம் ஆகிறது.
புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும்
தற்போது இந்த சுகாதார நிலையம் பள்ளிக்கூடத்தின் அருகில் உள்ள தனி அறையில் செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவர்களோ, செவிலியர்களோ தொடர்ந்து வருவதில்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற முடியவில்ைல. சிகிச்சை பெறுவதற்கு கரம்பயம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ, பட்டுக்கோட்டைக்கோ தான் செல்லும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செண்டாங்காட்டில் பராமரிப்பின்றி கிடக்கும் சுகாதார நிலையத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றார்.