கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும்


கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடல் அட்டை மீதான தடையை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று அகில இந்திய மீனவர் காங்கிரசின் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணாடோ கோரிக்கை விடுத்து உள்ளார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

அகில இந்திய மீனவர் காங்கிரசின் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணாடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த 11.7.2001-ல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது கடல் அட்டை ஒரு அழியும் உயிரினம் என்று அதைப் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. கடல் அட்டைகளுக்கு சீனா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அமோக வரவேற்பு உண்டு. இவற்றை அவர்கள் மருந்துகளாகவும், உணவுப்பொருட்களாகவும் பயன்படுத்துகின்றனர். இதனால் தமிழக மீனவர்கள் கடல் அட்டைகளைச் சேகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.

ஆனால் கடந்த 22 ஆண்டுகளாக கடல் அட்டைகள் சேகரிப்பு மீதான தடை இருப்பதால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடல் அட்டை அழியும் நிலையில் உள்ள உயிரினம் கிடையாது. மாறாக கடல் அட்டைகள் 6 மாதங்களுக்கு ஒருமுறை சுமார் 10 லட்சம் குஞ்சுகளைப் பொறிக்கும் தன்மை கொண்டவை.

கடல் அட்டைகளை பிடிப்பதற்கென்று தனியாக எந்த வலையும் கிடையாது. மீன் வலையில் இவை தானாகவே சிக்கிவிடும். வலையில் ஏறிய மறுகணமே இந்த அட்டைகளும் இறந்துவிடும். இந்த கடல் அட்டைகளைக் குறிவைத்துப் பிடித்தார்கள் என்று ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட கடல் அட்டை வகைகள் உள்ளன. ஆனால் மீனவர்கள் கருப்பு அட்டை, வெள்ளை அட்டை, சிவப்பு அட்டை என 3 வகையான அட்டைகளைப் பிடிப்பதற்குத்தான் அனுமதி கேட்கின்றனர். எனவே மத்திய அரசு கடல் அட்டை மற்றும் கடல் அட்டை மீதான தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களின் வாழ்வில் வளம் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story