கிட்டியணை உப்பனாற்றின் கரையை பலப்படுத்த வேண்டும்


கிட்டியணை உப்பனாற்றின் கரையை பலப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே கிட்டியணை உப்பனாற்றின் கரையை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே கிட்டியணை உப்பனாற்றின் கரையை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிட்டியணை உப்பனாறு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் பிரதான புதுமண்ணியாறு பாசன வாய்க்காலில் இருந்து கிட்டியணை உப்பனாறு பிரிந்து சென்று பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே கடலில் கலக்கிறது. இந்த கிட்டியணை உப்பனாறு அப்பகுதியில் உள்ள சுமார் 5000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் தேங்கும் மழை நீரை வெளியேற்றி கடலில் கலக்கச் செய்யும் முக்கிய ஆறாக இருந்து வருகிறது.

மேலும் அப்பகுதியில் நல்லூர், பழையபாளையம், புதுப்பட்டினம், புளியந்துறை, கொடக்காரமூலை உள்ளிட்ட சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழாமலும் இருக்க செய்து கிராமங்களுக்கு அரணாகவும் இருந்து வருகிறது. கடந்த வருடம் புது மண்ணியாற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், கொள்ளிடம் ஆற்றில் ஏழு முறை தண்ணீர் வெளியேற்றப்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும் கிட்டியணை உப்பனாற்றின் வழியே தண்ணீர் அதிகமாக செல்லும்போது கிட்டியணை உப்பனாற்றின் இடது கரை பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு மெலிந்தது.

பலப்படுத்த வேண்டும்

நன்கு தரமாக அமைக்கப்பட்டிருந்த கிட்டியணை உப்பனாற்றின் இடது கரை கடந்த வருடம் ஏற்பட்ட தொடர் அதிக மழை வெள்ளத்தால் உடைந்து மெலிந்தது.அப்போது கரை முழுவதும் மூழ்கி கரையை ஒட்டி உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் புகுந்து சேதப்படுத்தியது. கிட்டியணை உப்பனாறு அப்பகுதியில் முக்கிய வடிகால் வசதியை ஏற்படுத்தி தரும் ஆறாக இருந்து வருகிறது.

இந்த உடைந்த கரையை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பலப்படுத்துவதன் மூலம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும்போது கரையோரம் உள்ள நிலங்களில் புகுந்து பயிர் சேதம் ஆவதை தவிர்க்க முடியும். எனவே வரும் மழைக்காலத்துக்குள் இந்த உடைந்த கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story