முத்துகவுண்டனூர்-பாலார்பதி இடையே கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியது
முத்துகவுண்டனூர்-பாலார்பதி இடையே கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியது
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே முத்துகவுண்டனூர்-பாலார்பதி இடையே கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தடுப்பணை
கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம் முதல்நாச்சிபாளையம், சொக்கனூர், முத்துக்கவுண்டனூர், பெரும்பதி வழியாக வறட்டாறு சொல்கிறது. இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இந்த மழை தண்ணீரை தேக்குவதற்கு போதிய தடுப்பணைகள் இல்லாததால், மழைநீர் வீணாக கேரளாவுக்கு சென்றது.
இந்த நிலையில் கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வறட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தரவேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து வறட்டாற்றில் முத்துகவுண்டனூர்-பாலார்பதி இடையே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 24 லட்சம் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக பெய்த கனமழை காரணமாக வறட்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
எங்களது கோரிக்கையை ஏற்று நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த தமிழக அரசு வறட்டாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டியது. தற்போது இந்த தடுப்பணையில் சுமார் 2.6 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கி உள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர். இதனால் இந்த பகுதியில் நீர்மட்டம் உயரும். விவசாயிகள் தங்கு தடையின்றி பயிர்சாகுபடி பணிகளை மேற்கொள்ளலாம். தென்னை மரங்களும், விவசாயமும் செழிப்படையும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.