பச்சை மலையில் மழைநீர் செல்ல இடையூறாகவுள்ள தடையை அகற்ற வேண்டும்-அரும்பாவூர் விவசாயிகள் கலெக்டரிடம் மனு
பச்சை மலையில் மழைநீர் செல்ல இடையூறாக உள்ள தடையை அகற்றக்கோரி அரும்பாவூர் விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
கலெக்டரிடம் மனு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூரை சேர்ந்த விவசாயிகளில் சிலர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், பச்சை மலையில் இருந்து வரும் மழைநீர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பட்டா நிலத்தில் தான் சென்று கொண்டிருந்தது. இதில் கொட்டாரக்குன்று-அரும்பாவூர் செல்லும் தார் சாலையின் குறுக்கே பெரியசாமி கோவில் அருகே குழாய் மூலம் தண்ணீர் கீழ்புறம் உள்ள பட்டா நிலத்தில் சென்று கொண்டிருந்தது.
இதனை கீழ்ப்புறம் உள்ள விவசாயிகள் சிலர் தங்களது பட்டா நிலத்தின் வழியாக பச்சை மலை மழைநீர் செல்லக்கூடாது என்று கற்களை குவித்து அடைத்து தடையை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் சாலைக்கு மேல்புறம் உள்ள விவசாயிகளின் 50 ஏக்கர் விளை நிலைங்களில் தண்ணீர் தேங்கி சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தண்ணீர் செல்வதற்கு தடையை அகற்றுமாறு கூறியதற்கு அவர்கள் அகற்றவில்லை. எனவே தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ள தடையை அகற்றி தண்ணீர் தேங்கியுள்ள விவசாய விளை நிலங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
ஆர்ப்பாட்டம்
இதேபோல் வேப்பந்தட்டை ஒன்றியம், தழுதாழை கிராம ஊராட்சி 5-வது வார்டு அம்பேத்கர் தெருவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தராத ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பகுதி வார்டு உறுப்பினரும், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் கிளை செயலாளருமான செல்வகுமாரி தலைமையில் பொதுமக்களில் சிலர் கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது அவர்களிடம் கலெக்டர் மனுவை வாங்க மறுத்ததாகவும், மனுவை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வந்து தருமாறு கூறி விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
மனுவை வாங்க மறுத்த கலெக்டரை கண்டித்தும், அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.