பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்
திருவண்ணாமலை, செய்யாறில் 24-ந் தேதி நடைபெறும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் பேசினார்.
திருவண்ணாமலை, செய்யாறில் 24-ந் தேதி நடைபெறும் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் பேசினார்.
ஆய்வு கூட்டம்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 24-ந் தேதி திருவண்ணாமலை மற்றும் செய்யாறில் நடைபெற உள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 24-ந் தேதியன்று (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் உள்ள செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
அடிப்படை வசதிகள்
இம்முகாமில் பொது மருத்துவம் (ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்), சிறுநீரகம், மார்பகம் மற்றும் கர்பப்பை வாய் புற்றுநோய், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம், மன நல மருத்துவம், நரம்பியல், இருதயமருத்துவ சிகிக்சைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் இந்த முகாமில் ஸ்கேன், எக்ஸ்ரே, எக்கோ, இ.சி.ஜி. ஆகிய பரிசோதனைகளும், அனைத்து ரத்த பரிசோதனைகளும் மற்றும் சிறுநீரக பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த முகாமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்கிறார்.
முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, அரசு மருத்துவக்கல்லூரி டீன் அரவிந்த், சுகாதார பணிகள் இணை இயக்குனர் கேப்டன் ஏழுமலை, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் செல்வக்குமார், செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா மற்றும் உதவி கலெக்டர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.