சத்துணவு கூடத்திற்குள் புகுந்து கரடி அட்டகாசம்
குன்னூர் அருகே சத்துணவு கூடத்திற்குள் புகுந்து கரடி அட்டகாசம் செய்தது.
குன்னூர்
குன்னூரையொட்டி உள்ள கிராமங்களில் தற்போது வன விலங்குகளின் நட்மாட்டம் அதிகரித்து வருகிறது. தண்ணீர் மற்றும் உணவு தேடி வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த சில நாட்களாக அடிக்கடி பேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இந்த நிலையில் பேரட்டி பகுதியில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சத்துணவு கூடத்திற்குள் 2 நாட்களுக்கு முன்பு இரவு கரடி ஒன்று புகுந்துள்ளது. இந்த கரடி அங்கிருந்த உணவு பொருட்கள், பொருட்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் வனத்துறையிடம் தகவல் தெரிவித்தனர். மேலும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் வனத்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் சத்துணவு கூடத்திற்குள் புகுந்து கரடி அட்டகாசம் செய்துள்ளது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடித்து, வேறு இடத்தில் விடவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.