கரடி வனப்பகுதியில் விடப்பட்டது


கரடி வனப்பகுதியில் விடப்பட்டது
x
தினத்தந்தி 16 Feb 2023 12:30 AM IST (Updated: 16 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே விவசாயி வீட்டில் பிடிபட்ட கரடியை வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் மலையடிவாரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. நேற்று முன்தினம் அவர் மற்றும் குடும்பத்தினர் வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அவருடைய வீடு திறந்து இருந்து. அப்போது வீட்டுக்குள் கரடி ஒன்று புகுந்தது. அதை பார்த்து அவருடைய வளர்ப்பு நாய் குரைத்துள்ளது. உடனே மாரிமுத்து வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு வனத்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த அவர்கள் சுமார் 8 மணி நேரம் போராடி மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடித்தனர். அது பெண் கரடி ஆகும். அந்த கரடியை கூண்டில் வைத்து ஆண்டிப்பட்டி வனசரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர் மூலம் கரடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அந்த கரடியை ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதிக்கு வாகனம் மூலம் வனத்துறையினர் கொண்டு சென்றனர். அங்கு கூண்டில் இருந்து கரடியை வனப்பகுதிக்குள் திறந்து விட்டனர்.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி வனச்சரகர் அருள்குமாரிடம் கேட்டபோது, பிடிபட்ட கரடிக்கு சுமார் 17 வயது இருக்கலாம் என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். வயது முதிர்வு காரணமாக அந்த கரடிக்கு பற்கள் உதிர்ந்த நிலையில் காணப்பட்டது. வனப்பகுதியில் விடப்பட்ட கரடியை 3 முதல் 5 நாட்களுக்கு கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.


Related Tags :
Next Story