விதிமீறல் நடந்ததாக கூறி ஏலம் எடுக்க வந்தவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்
விழுப்புரம் ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறை வாகனங்கள் ஏலத்தில் விதிமீறல் நடந்ததாக கூறி அதிகாரிகளிடம் ஏலம் எடுக்க வந்தவர்கள் வாக்குவாதம் செய்தனர்
விழுப்புரம்
வாகனங்கள் ஏலம்
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு தற்போது உபயோகமில்லாமல் இருக்கும் சரக்கு வாகனம், வேன், இருசக்கர வாகனம் என 10 வாகனங்கள் நேற்று விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் பொது ஏலம் நடந்தது. காலை 10 மணிக்கு ஏலம் தொடங்கப்படும் என்றும், இதற்காக 9 மணியளவில் ரூ.5 ஆயிரம் ஏலத்தொகை செலுத்தி பங்கேற்கலாம் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஏலத்தில் பங்கேற்க 50-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். ஆனால் காலை 10 மணிக்குள்ளாகவே ஏலத்தை முடித்துவிட்டதாக கூறி அவர்கள், அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விதிமீறல்
இதுகுறித்து ஏலம் எடுக்க வந்தவர்கள் கூறுகையில், வாகனங்களுக்கான பொது ஏலம் காலை 10 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கு முன்பாகவே ஏலத்தை நடத்தி முடித்துவிட்டனர். இது எந்தவிதத்தில் நியாயம். கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கபிரிவு அதிகாரி தலைமையில் நடந்த இந்த ஏலத்தில் அரசு தானியங்கி பணிமனை உதவி பொறியாளர், வட்டார போக்குவரத்து அலுவலகத்தை சேர்ந்த மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் இன்றி ஏலம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் விதிமீறல் நடந்துள்ளது. முறையாக ஏலம் நடத்தாமல் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். எனவே இந்த ஏலத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் மறுஏலம் நடத்த வேண்டும் என்றனர்.