பட்டியலின மக்களுக்கு பக்கபலமாக இருப்பது பா.ஜ.க. மட்டும்தான் -அண்ணாமலை பேட்டி


பட்டியலின மக்களுக்கு பக்கபலமாக இருப்பது பா.ஜ.க. மட்டும்தான் -அண்ணாமலை பேட்டி
x

உண்மையில் பட்டியலின மக்களுக்கு பக்கபலமாக இருப்பது பா.ஜ.க. மட்டும்தான் என்று அண்ணாமலை கூறினார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் குமரன் சேதுபதி சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.

அவரது குடும்பத்தினரை சந்தித்து பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கோவில்களை மட்டும் சுற்றி சுற்றி வந்து பெரிய இடையூறுகளை கொடுத்து வருகின்றனர். ஒரு ஆதீனமே கோவில்கள் அரசியல்வாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்று சொல்கிறார் என்றால், எவ்வளவு தாக்கம் இருக்க வேண்டும்? முற்றும் துறந்தவர்களின் மனதில் இருந்து இவ்வாறு கூறும் அளவிற்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதனை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பா.ஜனதா சார்பில் அறிக்கை

சுகாதாரத்துறை அமைச்சர் எங்களின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தி.மு.க. அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அதற்கு உரிய ஆதாரங்களை இணைத்து பா.ஜ.க. சார்பில் அறிக்கை வெளியிடப்படும்.

சட்டம்-ஒழுங்கு, குறிப்பாக சென்னையில் கிடையாது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொடூரமான கொலை, கற்பழிப்பு, கூட்டு பலாத்காரம் இல்லாத நாள் இல்லை. 2021-ம் ஆண்டு தரவுகளின் அடிப்படையில் போக்சோ, கொடூர குற்றம், கற்பழிப்பு போன்றவை 2020-ஐ விட அதிகம்தான்.

ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் ஏன்?

சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கிறது என்றால் ஏன் தற்போது ஐ.பி.எஸ். அதிகாரிகள் பெரிய அளவில் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்? அதிகாரிகளை மாற்றினால் மட்டும் இதற்கு தீர்வு ஏற்படாது.

கட்சிக்காரர்கள் போலீசாரை வேலை செய்யவிடாமல் தடுப்பதை நிறுத்தினால் மட்டும்தான் தமிழக மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

பட்டியலின மக்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பட்டியலின மக்களுக்காக கட்சி நடத்துவதாக சொல்வார். ஆனால், உண்மையில் பட்டியலின மக்களுக்கு பக்கபலமாக இருப்பது பா.ஜ.க. மட்டும்தான்.

தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்கள் பிரச்சினைக்காகவும் குரல் கொடுத்து வருகிறோம். தி.மு.க. ஆட்சியால் பட்டியலின மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. பட்டியலின மக்களுக்காக இருக்கும் கட்சி பா.ஜ.க. என்பதை திருமாவளவன் விரைவில் உணர்ந்து கொள்வார்.

பிரதமர் மோடியின் படத்தை ஏன் அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும் என்றால் அவர் அந்த அளவிற்கு மக்களுக்காக செய்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரம்

ராமநாதபுரம் மண்ணுக்கு சொந்தமானது, கச்சத்தீவு. அதை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆகியோர் தாரைவார்த்து விட்டனர்.

கச்சத்தீவு பிரச்சினையில் 1976-ல் ரத்து செய்த 6-வது சட்டப்பிரிவை மீண்டும் இந்தியா செயல்படுத்த வேண்டும். அதன்மூலம் நாம் மீன்பிடிக்கவும், வலையை உலர்த்தவும் உரிமை கிடைக்கும். கச்சத்தீவு பிரச்சினையில் இரட்டை நிலைப்பாட்டை எடுக்கக்கூடாது. எனவே கச்சத்தீவு நமக்கு வரும் முன் 6-வது சட்டப்பிரிவை சரிசெய்ய வேண்டும். கச்சத்தீவுக்கு விசா இல்லாமல் செல்ல வழிவகை செய்ய வேண்டும். அதனை பிரதமர் மோடியால் மட்டுமே செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story