படகு இல்லத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
வால்பாறையில் படகு இல்லத்தை செயல் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வியாபாரிகள் மனு அனுப்பியுள்ளனர்.
வால்பாறை
வால்பாறையில் படகு இல்லத்தை செயல் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வியாபாரிகள் மனு அனுப்பியுள்ளனர்.
படகு இல்லம்
வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே படகு இல்லமும், பி.ஏ.பி. காலனி பகுதியில் தாவரவியல் பூங்காவும் அமைக்கப்பட்டது. இவை அரசு துறைகளின் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணியை மேற்கொண்ட வால்பாறை நகராட்சியின் முன்னாள் ஆணையாளர் மீது நகராட்சி நிர்வாகம் சார்பிலேயே பல்வேறு முறைகேடு புகார்கள் கூறப்பட்டது. இது தொடர்பாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பயன் இல்லை
இந்த நிலையில் வால்பாறையில் தாவரவியல் பூங்கா மட்டும் திறக்கப்பட்டு உள்ளது. இதை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அவ்வப்போது பயன்படுத்தி வருகின்றனர். இருந்தாலும், பூங்காவில் போதிய வசதிகள் இல்லாத நிலை இருந்து வருகிறது. படகு இல்லத்தை பொறுத்தவரை பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவிலான படகு இல்லமாக இருக்கிறது. 10-க்கும் மேற்பட்ட படகுகள் வாங்கப்பட்டு கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 10-ந் தேதி சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை பயன்படாமல் உள்ளது.
கோரிக்கை மனு
இதற்கிடையில் படகு இல்ல பணிகளும், வால்பாறை நகராட்சியின் முன்னாள் ஆணையாளரின் வழக்கு விசாரணைக்குள் இருப்பதால் படகு இல்லம் திறக்கப்படாமல் கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வருகிறது. எனவே பயனற்ற நிலையில் இருக்கும் படகு இல்லத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், இல்லையென்றால் ரூ.10 கோடியை நகராட்சிக்கு செலுத்தி குத்தகைக்கு எடுத்து நடத்தி கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வால்பாறை வட்ட வியாபாரிகள் கூட்டமைப்பினர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.