கோவை முத்தண்ணன் குளத்தில் மிதந்த பெண் பிணம்
கோவை முத்தண்ணன் குளத்தில் பிணமாக மிதந்த பெண் உடலை போலீசார் மீட்டனர். அவர் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை
கோவை முத்தண்ணன் குளத்தில் பிணமாக மிதந்த பெண் உடலை போலீசார் மீட்டனர். அவர் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளத்தில் மிதந்த பெண் உடல்
கோவை சுந்தராபுரம் முருகன் நகரை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 38). இவர் ஆர்.எஸ்.புரம் தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தை மீன் பிடிப்பதற்காக குத்தகைக்கு எடுத்து மீன் பிடித்து வருகிறார். இவரிடம் பரிசல் ஓட்டும் பணியில் ரங்கநாதன் என்பவர் இருந்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று ராயப்பன் மற்றும் ரங்கநாதன் ஆகியோர் மீன்பிடிப்பதற்காக பரிசலில் முத்தண்ணன் குளத்துக்கு சென்றனர். முத்தண்ணன் குளத்தில் விநாயகர் சிலை கரைக்கும் இடத்தில் வலையை வீசினர். அப்போது அங்கு இறந்தநிலையில் பெண் உடல் மிதந்தது. இதைப்பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
போலீஸ் விசாரணை
பின்னர் இதுகுறித்து ராயப்பன் கோவை ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக மிதந்த பெண்ணின் உடலை தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். குளத்தில் பிணமாக மிதந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தெரியவில்லை. மேலும் அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து குளத்தில் உடலை வீசி சென்றனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, முத்தண்ணன் குளத்தில் பிணமாக மிதந்த பெண்ணுக்கு 55 வயது இருக்கலாம். அவருடைய உடலில் காயங்கள் எதுவும் இல்லை. மேலும் அவருக்கு சொரியாசிஸ் நோய் இருந்துள்ளது. இதனால் அவர் மனவேதனையில் தற்கொலை செய்து இருக்கலாம் என்கிற சந்தேகமும் உள்ளது.
கோவை முத்தண்ணன் குளத்தில் பெண் உடல் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.