என்ஜினீயரிங் மாணவர் உடல் கரை ஒதுங்கியது


என்ஜினீயரிங் மாணவர் உடல் கரை ஒதுங்கியது
x
தினத்தந்தி 27 Jun 2023 12:15 AM IST (Updated: 27 Jun 2023 3:24 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி அருகே படகில் இருந்து கடலில் தவறி விழுந்த என்ஜினீயரிங் மாணவர் உடல் கரை ஒதுங்கியது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே படகில் இருந்து கடலில் தவறி விழுந்த என்ஜினீயரிங் மாணவர் உடல் கரை ஒதுங்கியது.

என்ஜினீயரிங் மாணவர்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன். மீனவரான இவருடைய மகன் ஞானசேகரன்(வயது 20). இவர், நாகையில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் தனது தந்தை சந்திரசேகரன், தாத்தா கோவிந்தசாமி ஆகியோருடன் நேற்று முன்தினம் காலை ஒரு படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். இவர்கள் மீன் பிடித்துக்கொண்டு மதியம் கரை திரும்பிக்கொண்டு இருந்தனர்.

கடலில் விழுந்து மாயம்

அப்போது பலத்த காற்று வீசியதால் கடல் அலை சீற்றமாக காணப்பட்டது. இதனால் படகில் இருந்து தடுமாறி ஞானசேகரன் கடலில் விழுந்து மாயமானார். உடனே அவரது தந்தை மற்றும் தாத்த ஆகிய இருவரும் தேடிப்பார்த்தனர். நீண்ட நேரம் தேடிப்பார்த்தும் ஞானசேகரன் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த மீனவர்கள், கடலோர காவல் படை போலீசார் மற்றும் வேளாங்கண்ணி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கடலில் மூழ்கி மாயமான ஞானசேகரனை தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.

உடல் கரை ஒதுங்கியது

இந்த நிலையில் நேற்று காலையில் காமேஸ்வரம் கடற்கரையில் ஞானசேகரன் உடல் கரை ஒதுங்கி கிடந்தது. தகவல் அறிந்த கீழையூர் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்துக்கு ெசன்று ஞானசேகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக கீழையூர் கடலோர காவல்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் விழுந்து மாயமான என்ஜினீயரிங் மாணவர், பிணமாக கரை ஒதுங்கியது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story