புத்தக கண்காட்சி தொடங்கியது

சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியது.
புத்தக திருவிழா
சேலம் மாவட்டத்தில் உள்ள புத்தக பிரியர்களுக்காகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையிலும் தெய்வீகம் சார்பில் ஆண்டு தோறும் ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் புத்தக திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான புத்தக திருவிழா கண்காட்சி "சேலம் புக் பேர்-2023" என்ற தலைப்பில் சேலம் அழகாபுரம் பகுதியில் தெய்வீகம் திருமண மண்டபத்தில் தொடங்கியது.
புத்தக திருவிழாவையொட்டி அங்கு 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் ஆன்மிகம், மருத்துவம், பொறியியல், பொது அறிவு, அறிவியல், கலை, கதை, கணிப்பொறி, விளையாட்டு போன்ற அனைத்து வகை புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. இதனை பொதுமக்கள், மாணவர்கள் நேற்று ஆர்வமுடன் பார்வையிட்டனர். பலர் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கி சென்றனர்.
"தினத்தந்தி"பதிப்பக புத்தகங்கள்
இந்த புத்தக கண்காட்சி விற்பனையில் அனைத்து புத்தகங்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. புத்தக கண்காட்சி-விற்பனை தினமும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெறுகிறது. அனைவருக்கும் அனுமதி இலவசம்.
இந்த புத்தக கண்காட்சி வருகிற 23-ந் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சியின் ஒரு அரங்கில் "தினத்தந்தி" பதிப்பக புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அங்கு தினத்தந்தி பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
10 சதவீதம் தள்ளுபடி
இதில், தமிழ் சினிமா வரலாறு புத்தகம், உலக நாயகன் கமல்ஹாசன், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சாதனை சரித்திரம், இலக்கியத்தில் இன்பரசம், பழகிப்பார்ப்போம் வாருங்கள், அதிகாலை இருட்டு, திரை உலக அதிசயங்கள், நானும் சினிமாவும், அறிவோம் இஸ்லாம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.






