துணியை காயப்போடும் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுவன் சாவு


துணியை காயப்போடும் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுவன் சாவு
x

துணியை காயப்போடும் கயிற்றை பயன்படுத்தி விளையாடிய சிறுவனின் விளையாட்டு விபரீதத்தில் முடிந்தது. கயிறு கழுத்தை இறுக்கியதால் அவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மதுரை


துணியை காயப்போடும் கயிற்றை பயன்படுத்தி விளையாடிய சிறுவனின் விளையாட்டு விபரீதத்தில் முடிந்தது. கயிறு கழுத்தை இறுக்கியதால் அவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விபரீத சம்பவம்

மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டி, கூலி தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களின் ஒரே மகன் விசாகன் (வயது 10). அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் விளையாடினான். அப்போது துணி காயப்போடும் கொடி கயிற்றை தன் கழுத்தில் மாட்டிக்கொண்டு விளையாட்டுத்தனமாக சுற்றியுள்ளான்.

எதிர்பாராதவிதமாக கயிறு அவனது கழுத்தை இறுக்கியது. சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி மயங்கி விட்டான். அந்த நேரத்தில் அங்கு வந்த அவனது தாயார் லட்சுமி, இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் கூச்சல் போட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் கயிறை அறுத்து சிறுவனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சிறுவன் சாவு

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, சிறுவன் இறந்துவிட்டது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சுப்பிரமணியபுரம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். விசாகன் உடலை பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துரைப்பாண்டி, லட்சுமி தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பிறகுதான் விசாகன் பிறந்தான். நேற்று முன்தினம் இரவு தந்தை துரைப்பாண்டியுடன் செல்போனில் பேசி உள்ளான். அப்போது தீபாவளிக்கு என்னென்ன பட்டாசுகள் வாங்க வேண்டும் என்ற விவரத்தையும் தெரிவித்து இருக்கிறான். அதன் பிறகுதான் விசாகன் துணி காய போடும் கயிறு இறுக்கிய விபரீத சம்பவத்தில் உயிரிழந்த சோகம் நேர்ந்துள்ளது.


Next Story