ஊதுபத்தி தயாரிக்கும் எந்திரத்தில் சிக்கி சிறுவன் பலி


ஊதுபத்தி தயாரிக்கும் எந்திரத்தில் சிக்கி சிறுவன் பலி
x

வாணியம்பாடி அருகே ஊதுபத்தி தயாரிக்கும் எந்திரத்தில் சிக்கி சிறுவன் பலியானான்.

திருப்பத்தூர்

எந்திரத்தில் கை சிக்கியது

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியில் ஊதுபத்தி மற்றும் பாய் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஆண்கள், பெண்கள் என 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் காமராஜ்புரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கண்ணன் என்பவரின் மகன் மோகன் (வயது 17) 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு கடந்த சில மாதங்களாக இந்த தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளான்.

இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு வந்த மோகன் ஊதுபத்தி மாவு கலக்கும் எந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது சிறுவனின் கை எந்திரத்தில் சிக்கியது. இதனால் கதறி துடித்த அவனது சத்தத்தை கேட்ட அங்கு பணியாற்றிய மற்ற தொழிலாளர்கள் உடனடியாக எந்திரத்தை நிறுத்தினர்.

சிறுவன் சாவு

பின்னர் அவனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் பரிதாபமாக உயிரிழந்தான்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தாலுகா போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story