சீர்திருத்த பள்ளியில் சிறுவன் மர்மச்சாவு: மகனை அடித்து கொன்றதாக தாய் கலெக்டரிடம் புகார் மனு
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் மர்மச்சாவு அடைந்த சம்பவத்தில் மகனை பாதுகாவலர்கள் அடித்து கொன்றதாக கலெக்டர் அலுவலகத்தில் தாய் புகார் மனு அளித்துள்ளார்.
திருட்டு வழக்கில் கைது
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் கடந்த மாதம் தாம்பரம் ரெயில்வே குடியிருப்பில் ரெயில்வே துறைக்கு சொந்தமான பேட்டரி ஒன்றை திருடியதாக கூறி ரெயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 29-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவனை செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்ட சிறுவன் கடந்த 31-ந் தேதி திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்.
சாவில் மர்மம் புகார்
அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில் மகனின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், கடந்த மாதம் 29-ந்தேதி தனது மகனை தாம்பரம் ரெயில்வே போலீசார் அழைத்துச் சென்று சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தபோது, நலமுடன் இருந்ததாகவும், தனது மகனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் உள்ள பாதுகாவலர்கள் அடித்து கொலை செய்து விட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.
நீதிபதி ஆய்வு
மேலும் சிறுவனின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்ட சிறுவன் உடலை செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.