அரசு பள்ளி விடுதிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கிய சிறுவன்


அரசு பள்ளி விடுதிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கிய சிறுவன்
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நவக்கரையில் அரசு பள்ளி விடுதிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கிய சிறுவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமை ஆசிரியர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கோயம்புத்தூர்

கோவை

நவக்கரையில் அரசு பள்ளி விடுதிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கிய சிறுவன் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமை ஆசிரியர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அரசு பள்ளி விடுதி

கோவை நவக்கரை அருகே உள்ள மாவுத்தம்பதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக கண்ணதாசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கே.ஜி. சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

மாவுத்தம்பதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அதன் அருகே விடுதியும் உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

தாக்குதல்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பாறைக்களத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து விடுதிக்குள் புகுந்தான். பின்னர் அங்கிருந்த மாணவர்கள் சிலரை தாக்கி, தகாத வார்த்தைகளால் பேசினான். இதை அங்கு பணியில் இருந்த ஆசிரியை ஒருவர் பார்த்து தட்டி கேட்டார். அதற்கு அந்த சிறுவன், அவரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தான். இந்த சிறுவன் கடந்த சில மாதங்களாகவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறான். மாணவர் விடுதி மட்டுமின்றி மாணவிகள் விடுதிக்குள்ளும் சென்று, அவர்களையும் தாக்கி, பயமுறுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளான்.

விசாரணை

இதனால் மாணவ-மாணவிகள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் அங்கு பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது. எனவே மாணவ-மாணவிகளை அச்சுறுத்தி வரும் சிறுவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் கே.ஜி. சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story