இறப்பு சான்றிதழை ரத்து செய்யக்கோரி மண்எண்ணெய் கேனுடன் வந்த சிறுவனால் பரபரப்பு


இறப்பு சான்றிதழை ரத்து செய்யக்கோரி மண்எண்ணெய் கேனுடன் வந்த சிறுவனால் பரபரப்பு
x

தன் பெயரில் உள்ள இறப்பு சான்றிதழை ரத்து செய்யக்கோரி மண்எண்ணெய் கேனுடன் வந்த சிறுவனால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

தன் பெயரில் உள்ள இறப்பு சான்றிதழை ரத்து செய்யக்கோரி மண்எண்ணெய் கேனுடன் வந்த சிறுவனால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

குறைதீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச் சான்று, வேலைவாய்ப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 576 மனுக்கள் பெறப்பட்டன.

பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அவர் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

முன்னதாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு என்.எல்.சி.யின் வயல் அழிப்பு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு இலை, தழைகளை கையில் ஏந்தி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாவட்ட தலைவர் புருசோத்தமன் தலைமையிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நடைபெறும் மின் உற்பத்தில் 60 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் நிலக்கரி தோண்டி எடுக்க 2006-ல் நிலம் கையகப்படுத்தி என்.எல்.சி. நிர்வாகம் 16 ஆண்டுகள் பயன்படுத்தாமல் இருந்ததால் நில உரிமையாளர்களே சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அறுவடை வயலில் என்.எல்.சி. நிர்வாகம் பணிகளுக்கான பொக்லைன் எந்திரம் மூலம் சேதப்படுத்துவது எதிர்காலத்தில் உணவு பஞ்சம் ஏற்படும் என்பதை சுட்டி காட்டும் வகையில் உள்ளது.

இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இறப்பு சான்றிதழ்

ஆரணி பகுதியை சேர்ந்த 17-வயது சிறுவன் உயிருடன் உள்ள நிலையில் அவருக்கு அவரது உறவினர்கள் சிலர் இறப்பு சான்றிதழ் வாங்கி உள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த அச்சிறுவன் கடந்த மாதம் இறப்பு சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

ஆனால் இதுவரை இறப்பு சான்றிதழ் ரத்து செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தன்னுடைய இறப்பு சான்றிதழ் ரத்து செய்யப்படாததால் அந்த சிறுவன் தனது உறவினர்கள் 2 பேருடன் குறைதீர்வு கூட்டத்திற்கு மண்எண்ணெய் கேனுடன் வந்தார்.

இதை கண்டு சுதாரித்து கொண்ட போலீசார் அந்த சிறுவனிடம் இருந்த மண்எண்ணெய் கேனை உடலில் ஊற்றி கொள்வதற்கு முன்பே பறிமுதல் செய்தனர். பின்னர் சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, தன் பெயரில் உள்ள இறப்பு சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஒப்படைக்க உள்ளேன் என்றார். பின்னர் அவரை மேல் விசாரணைக்காக திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story