ஏரியில் குளித்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீர் சாவு
விக்கிரமங்கலம் அருகே ஏரியில் குளித்துவிட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென இறந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6-ம் வகுப்பு மாணவன்
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே அணிக்குறிச்சி புதுத்தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 53), கூலி தொழிலாளி. இவரது மகன் சூரிய பிரகாஷ் (12). இவர் சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது பள்ளி கோடை விடுமுறை என்பதால் சூரிய பிரகாஷ் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டின் அருகே உள்ள ஏரியில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்துள்ளான். பின்னர் வீட்டிற்கு வந்த சூரிய பிரகாஷ் சாப்பிட்டுவிட்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி கொண்டிருந்துள்ளார்.
வாந்தி-மயக்கம்
அப்போது சிறுவனுக்கு திடீரென வாந்தி-மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் சூரிய பிரகாஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் சூரிய பிரகாஷ் எதனால் இறந்தார் என்பது தெரியவில்லை. இதன்காரணமாக அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து சிறுவனின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.