கனமழையால் உடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும்
பெரியகுப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் கனமழையால் உடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பரங்கிப்பேட்டை
2 ஆண்டுகள் ஆகிறது
பரங்கிப்பேட்டையில் இருந்து சின்னூர் புதுப்பேட்டை, சாமியார் பேட்டை வழியாக பெரியகுப்பம் மீனவர் கிராமத்திற்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாமியார்பேட்டைக்கும், குமாரபேட்டைக்கும் இடையே சிறிய பாலம் ஒன்று இருந்தது.
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பெய்த கனமழையின்போது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலம் அடித்து செல்லப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி, மினி லாரி உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பாலம் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள், மீனவ கிராமமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
பருவமழைக்கு முன்பு
இது குறித்து மீனவ கிராமமக்கள் கூறுகையில் பாலம் உடைந்து 2 ஆண்டுகள் ஆகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக இப்பகுதி வழியாக பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகிறோம். வேன், மினிலாரி, ஆட்டோ போன்ற வாகனங்கள் சாலையின் பக்கவாட்டில் உள்ள மண்பாதை வழியாக சென்று வருகின்றன. இதனிடையே மழை பெய்தால், அந்த மண் பாதையையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கூட எங்கள் பகுதிக்கு வந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க வருகிற பருவமழைக்குள் உடைந்த பாலத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.