மது கொடுத்து புரோட்டா மாஸ்டரை துண்டு, துண்டாக வெட்டி கொன்ற கொடூரம்


மது கொடுத்து புரோட்டா மாஸ்டரை துண்டு, துண்டாக வெட்டிய கொடூர சம்பவம் நடந்து உள்ளது. கணவர் மாயமானதாக நாடகமாடிய மனைவி தப்பி ஓடி விட்டார். கள்ளக்காதலன் சிக்கி விட்டார்.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

மது கொடுத்து புரோட்டா மாஸ்டரை துண்டு, துண்டாக வெட்டிய கொடூர சம்பவம் நடந்து உள்ளது. கணவர் மாயமானதாக நாடகமாடிய மனைவி தப்பி ஓடி விட்டார். கள்ளக்காதலன் சிக்கி விட்டார்.

புரோட்டா மாஸ்டர்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே சிங்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்கனி (வயது 43). இவருடைய மனைவி சாந்தி (36). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

பிச்சைக்கனி வெளிநாட்டில் ஓட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த மே மாதம் 25-ந்தேதி அன்று சொந்த ஊர் திரும்பி உள்ளார். மே மாதம் 27-ந் தேதி அன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி சாந்தி கடந்த மே 30-ந்தேதி அன்று தேவிபட்டினம் போலீஸ் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். இது குறித்து தேவிபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

செல்ேபானில்...

இதற்கிடையே காணாமல் போன பிச்சைக்கனியின் தந்தை குப்பு தன் மகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் அவனது மனைவி மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் துணை சூப்பிரண்டு ராஜா தலைமையில் தேவிபட்டினம் போலீசார் பிச்சைக்கனியின் மனைவி சாந்தியிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக கூறினார். இதனால் அவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்தனர். பின்னர் அவருடைய செல்போனை வாங்கி யாரிடம் பேசி இருக்கிறார் என்பதை போலீசார் ஆய்வு நடத்தினர். அதில் அவரது உறவினர்களான பார்த்திபன் மற்றும் கலை மோகன் என்ற இருவருடனும் சாந்தி அதிகமாக பேசியிருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் தேவிபட்டினம் அருகே உள்ள சீனங்குடி கிராமத்தை சேர்ந்த கலை மோகன் (26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

வெட்டிக்கொலை

விசாரணையில் சாந்திக்கு அவரது உறவினர்களான பார்த்திபன் அவரது தம்பி கலை மோகன் ஆகிய இருவருடனும் கள்ளத்தொடர்பு இருந்து வந்து உள்ளது. கணவர் வெளிநாட்டில் இருந்து வந்ததால் அவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் என்ற எண்ணத்தில் சாந்தி கலைமோகனிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்து தனது கணவரை கொலை செய்து விடுமாறும் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து கலைமோகன், பார்த்திபன் ஆகிய இருவரும் கடந்த மே மாதம் 27-ந்தேதி அன்று பிச்சைக்கனியை மது குடிக்கலாம் என அழைத்துச் சென்று உள்ளனர். அங்கு 3 பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். மது அருந்திய போதை மயக்கத்தில் இருந்த பிச்சைக்கனியை இருவரும் சேர்ந்து அரிவாளால் உடலை பல துண்டுகளாக வெட்டி அதன் பின்னர் அரசலூர் அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் உடலை வீசிவிட்டு தப்பி சென்றுவிட்டனர் என விசாரணையில் தெரிய வந்தது.

வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய காதலன்

இந்த நிலையில் அரசலூர் அருகே கொலை செய்து வீசப்பட்ட பிச்சைக்கனியின் உடலை தேவிபட்டினம் போலீசார் பார்வையிட்டனர். அப்போது உடல் முழுவதும் எலும்பு கூடாக இருப்பதை பார்த்த போலீசார் அதை சேகரித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலர்கள் மூலம் கொலை செய்த மனைவி சாந்தி தப்பி ஓடிவிட்டார்.

மேலும் கொலை செய்த பார்த்திபன் கடந்த மே மாதம் 30-ந் தேதி அன்று வெளிநாட்டில் வேலை பார்ப்பதாக கூறி சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். கலைமோகனை மட்டும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய சாந்தி மற்றும் வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்றுள்ள பார்த்திபனையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை திட்டமிட்டு கொலை செய்துவிட்டு தனது கணவர் காணாமல் போய் உள்ளதாக போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து நாடகமாடியுள்ள சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story