ரூ.17 கோடி மதிப்பிலான புத்தர் சிலையை மீட்க வேண்டும்


ரூ.17 கோடி மதிப்பிலான புத்தர் சிலையை மீட்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Sept 2023 12:15 AM IST (Updated: 20 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகை சூடாமணி புத்த விகாரில் இருந்து திருடப்பட்ட ரூ.17 கோடி மதிப்பிலான புத்தர் சிலையை மீட்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் வலியுறுத்தி உள்ளார்.

நாகப்பட்டினம்

நாகை சூடாமணி புத்த விகாரில் இருந்து திருடப்பட்ட ரூ.17 கோடி மதிப்பிலான புத்தர் சிலையை மீட்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் வலியுறுத்தி உள்ளார்.

சாமி தரிசனம்

நாகையில் உள்ள நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்வதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் வந்தார்.

அங்கு சாமி தரிசனம் செய்த பிறகு அவர், நாகை கோர்ட்டு வளாகத்தில் உள்ள சூடாமணி புத்த விகாரம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார்.

பேட்டி

இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் அவரது ஆதரவுடன் சுமத்திரா, இந்தோனேசியா போன்ற தீவுகளை ஆட்சி செய்த அரசர் ஸ்ரீ விஜயமார விஜயதுங்கவர்மன் 1006-ம் ஆண்டு நாகையில் ராஜராஜ பெரும்பள்ளி என்ற புத்த விகாரை கட்டினார்.

இதற்கு அந்த அரசன் தனது தந்தையான சூடாமணி பெயரை சூட்டினார். ராஜராஜ சோழன் சுமார் 600 ஏக்கர் நிலத்தை இந்த சூடாமணி புத்த விகாருக்கு எழுதி வைத்தார்.

ரூ.17 கோடி மதிப்பிலான புத்தர் சிலை

இவ்வாறு சிறப்பு வாய்ந்த இந்த புத்த விகாரில் இருந்த 5 அடி உயரம் உடைய ரூ.17 கோடி மதிப்பிலான புத்தர் சிலை கடந்த 2003-ம் ஆண்டுக்கு முன்பு திருடப்பட்டு நாகையில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்டது.

இந்த புத்தர் சிலை அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தக்கூடிய நேரத்தில் எனக்கு பணி ஓய்வு கிடைத்து விட்டது. இதனால் என்னால் விசாரணை நடத்த முடியவில்லை.

மீட்க வேண்டும்

கடத்தப்பட்ட புத்தர் சிலை குறித்து தற்போதுள்ள சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும். ஆனால் சிலை கடத்தப்பட்டு 20 ஆண்டுகள் கடந்த நிலையில் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை.

எனவே இந்த புத்தர் சிலை கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் புத்தர் சிலையை மீட்டு நாகை சூடாமணி புத்த விகாரில் நிறுவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story