அவினாசி அருகே ஓடும் காரில் திடீர் தீ
அவினாசி அருகே ஓடும் காரில் திடீர் தீ நாயுடன் உரிமையாளர் இறங்கி ஓட்டம் பிடித்ததால் உயிர் தப்பினார்
அவினாசி
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பிலிப் (வயது 28). இவர் நேற்று கோவையில் இருந்து திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளிக்கு காரில் கோவை-சேலம் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தார். காரில் அவருடைய வளர்ப்பு நாயும் இருந்தது. இவருடைய கார் அவினாசியை அடுத்த தெக்கலூர் பைபாஸ் ரோட்டில் வந்தது. அப்போது காரின் அடிப்பகுதியில் இருந்து ேலசான புகை வந்தது. உடனே காரை சாலையோரம் நிறுத்திவிட்டு பிலிப் தான் கொண்டு வந்த நாயுடன் காரில் இருந்து கீழே இறங்கினார். அப்போது கார் குபீரென்று தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இதனால் பிலிப் நாயுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததால் உயிர் தப்பினார்.
இது குறித்து அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தால் பைபாஸ் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
---