இறைச்சிக்கடைக்காரர் சரமாரி வெட்டிக்கொலை
நெல்லை அருகே முக்கூடலில் இறைச்சிக்கடைக்காரர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முக்கூடல்:
நெல்லை அருகே முக்கூடலில் இறைச்சிக்கடைக்காரர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இறைச்சி கடைக்காரர்
நெல்லை அருகே உள்ள முக்கூடல் பாண்டியாபுரம் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70). இவர் தனது வீட்டை ஒட்டியபடி கோழி இறைச்சிக்கடை நடத்தி வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் ஆறுமுகம் கடையில் இருந்தார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 மர்மநபர்கள் அங்கு வந்தனர்.
சரமாரி வெட்டிக்கொலை
அவர்கள் திடீரென்று தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆறுமுகத்தை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். உடனே மர்மநபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் முக்கூடல் போலீசார் விரைந்து சென்று, ஆறுமுகத்தை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
சாலை மறியல்
இதை அறிந்த அந்த பகுதி மக்கள் அங்குள்ள சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அவர்களிடம் சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கொலையாளிகளுக்கு வலைவீச்சு
இந்த கொலை சம்பவம் குறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகள் யார்? எதற்காக இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இறைச்சிக்கடைக்காரர் கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.