கீழ்பவானி பாசன கால்வாயில் ஆகாய தாமரைகள்
முத்தூர் அருகே கீழ்பவானி பாசன கால்வாயில் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளதால் சீரான நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
முத்தூர்
முத்தூர் அருகே கீழ்பவானி பாசன கால்வாயில் ஆகாய தாமரைகள் ஆக்கிரமித்துள்ளதால் சீரான நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
வருவாய் கிராம பகுதிகள்
திருப்பூர் மாவட்டம் முத்தூர் நகரம், சின்னமுத்தூர், வேலம்பாளையம், மங்களப்பட்டி, பூமாண்டன் வலசு, ராசாத்தாவலசு, வள்ளியரச்சல் வருவாய் சுற்றுவட்டார கிராம
கீழ்பவானி பாசன பகுதிகளில் ஆண்டு முழுவதும் விவசாயம் சார்ந்த தொழில்கள் மிகவும் பிரதான தொழில்களாக செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கால்வாய் வழியாக ஆண்டுதோறும் ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் இரு பிரிவுகளாக எண்ணெய் வித்து பயிர் மற்றும் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.இதன்படி இப்பகுதிகளில் இந்த ஆண்டு நஞ்சை சம்பா சாகுபடிக்காக பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமிப்பு
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே காந்திநகர் பகுதியில் செல்லும் கீழ்பவானி பாசன கிளை கால்வாயில் ஆகாயத்தாமரைகள் ஒருபுறம் கரையை தொட்ட படி அதிக அளவில் பச்சை, பசேல் என்று நன்கு வளர்ந்து நீண்ட தூரத்திற்கு நீரை ஆக்கிரமித்து நிலையில் உள்ளது. இதனால் கீழ்பவானி பாசன கிளை கால்வாயில் தற்போது சீரான நீரோட்டம் செல்வது தடைபட்டு பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த இடத்தில் கீழ்பவானி பாசன கால்வாயில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளதன் காரணமாக இந்த இடத்தை தண்ணீர் சீராக வேகமாக கடந்து செல்வதில் மிகவும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆகாய தாமரைகள் பரவி உள்ள இந்த இடத்தில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்று சென்று வருகிறது. மேலும் இந்த இடத்தில் சிறுவர்கள், துணி துவைக்க வரும் சுற்றுவட்டார கிராம பகுதி பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகாய தாமரைகள் படர்ந்து உள்ள ஆபத்தை உணராமல் கால்வாயில் இறங்கி துணி துவைத்து, உள்ளே குதித்து நீந்தி விளையாடுகின்றனர்.
இவ்வாறு கால்வாயில் நீரில் இறங்கி விளையாடும் ஒரு சில பெண்கள், மாணவர்களுக்கு நீச்சல் தெரிந்திருந்தாலும் கால்வாயில் வளர்ந்து உள்ள ஆகாய தாமரைகள் வேர்களில் கால்பகுதி சிக்கி தத்தளித்து மேலே பாதுகாப்புடன் வர முடியாமல் உயிர் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இந்த கால்வாய் பகுதியில் ஆகாய தாமரைகள் சீரான நீரோட்டத்தை தடுப்பதால் மழைக்காலங்களில் அதிக அளவு நீர் செல்லும் போது இப்பகுதிகளில் நீர் மேலே எழும்பி அருகில் உள்ள ஊருக்குள் புகுந்து விடும் அபாயமும் உள்ளது.
துரித நடவடிக்கை
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் முத்தூர் - காந்தி நகரில் கீழ்பவானி பாசன கால்வாயை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைகளை உடனடியாக பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.