ரெயில் வருவதற்கு சற்று முன்பாக ரெயில்வே கேட்டில் அசுர வேகத்தில் மோதிய கார்
ரெயில் வருவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக ரெயில்வே கேட்டில் அசுர வேகத்தில் மோதிய காரால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கேட் பலத்த சேதம் அடைந்தது.
பனைக்குளம்,
ரெயில் வருவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக ரெயில்வே கேட்டில் அசுர வேகத்தில் மோதிய காரால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் கேட் பலத்த சேதம் அடைந்தது.
அரசு வேகத்தில் ேமாதிய கார்
ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் செல்வதற்காக உச்சிப்புளி ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது.
அப்போது, ரெயில்வே கேட் மீது அந்த கார் அசுர வேகத்தில் மோதியது. இதில் கேட் பலத்த சேதம் அடைந்தது.
ஆனால் அந்த கார், ரெயில்வே கேட்டை கடந்து நிற்காமல் சென்று, ஒரு பனை மரத்தில் மோதி நின்றது. இதில் காரில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரை மணி நேரம் தாமதம்
இதற்கிடையே ரெயில்வே கேட் மீது கார் மோதியதால், மண்டபம் ரெயில் நிலையத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னல் கிடைக்காமல் நின்றது. ரெயில்வே ஊழியர்கள் உச்சிப்புளி ரெயில்வே கேட்டில் சிக்னலை சரிசெய்த பின்னர், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
சேதம் அடைந்த உச்சிப்புளி ரெயில்வே கேட்டை சீரமைக்கும் பணி நேற்று பிற்பகலில் நடைபெற்றது. இதனால் வாகனங்கள் இருமேனி ரெயில்வே கேட் வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. அந்த சாலை மிகவும் குறுகியதாக இருந்ததால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
ரெயில் வருவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாகத்தான் ரெயில்வே கேட் மீது கார் மோதியது விசாரணையில் தெரியவந்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.