கார் டிரைவரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு
நெல்லிக்குப்பம் அருகே கார் டிரைவரை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்த மா்மநபர்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அருகே திருக்கண்டேஸ்வரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 47). கார் டிரைவர்.
சம்பவத்தன்று இவர் சவாரி ஏற்றிக்கொண்டு காரில் விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூருக்கு சென்றார். பின்னர் அங்கு பயணியை இறக்கிவிட்டு விட்டு மீண்டும் அதே காரில் ஊர் திரும்பினார். நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அரசு பெண்கள் பள்ளி அருகே வந்தபோது, அங்கு முகமூடி அணிந்து 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 4 பேர் திடீரென காரை வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் ஜெய்சங்கரை தாக்கி அவரிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
வலைவீச்சு
இது குறித்து ஜெய்சங்கர் நெல்லிக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கார் டிரைவரை தாக்கி பணம் மற்றும் செல்போனை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.