குன்னூர் மலைப்பாதையில் 90 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது; சிறுமி உள்பட 2 பேர் படுகாயம்
குன்னூர் மலைப்பாதையில் 90 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
குன்னூர்: குன்னூர் மலைப்பாதையில் 90 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவிலுக்கு சென்றனர்
கூடலூர் பகுதியை சேர்ந்தவர் குமார்(வயது 41). இவர், தனது குடும்பத்தினருடன் 2 கார்களில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்று இருந்தார். அதன்படி அங்கு அவர், குடும்பத்தினருடன் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு நேற்றுமுன்தினம் இரவு கூடலூருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தார்.
இதில் ஒரு காரில் குமாரும், அவரது அண்ணன் மகளுமான நந்தினி(14) ஆகிய 2 பேரும் வந்து கொண்டிருந்தனர். காைர, குமார் ஓட்டியுள்ளார். மற்றொரு காரில் அவர்களது குடும்பத்தினர் வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் கார்கள் வந்து கொண்டிருந்தன. அப்போது அப்பகுதியில் பனிமூட்டம், லேசான சாரல் மழை இருந்தது. இதனால் காரை, குமார் கடும் சிரமத்துக்கு மத்தியில் ஓட்டி சென்றுள்ளார். மரப்பாலம் அருகே ஒரு வளைவில் காரை, குமார் திருப்ப முயன்றுள்ளார்.
90 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது
இந்த சந்தர்ப்பத்தில் கார், அவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த தடுப்பு சுவரை உடைத்து 90 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து கார், பள்ளத்தின் ஒரு மரத்தில் மோதி நின்றது. இதனால் காருக்குள் இருந்த குமார், சிறுமி நந்தினி படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த குன்னூர் போலீசார், தீயணைப்பு படை வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து பள்ளத்தில் கவிழ்ந்த காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பள்ளத்தில் கார் கவிழ்ந்ததும் உடனே 'ஏர் பேக்' (பலூன்)திறக்கப்பட்டுள்ளது. இதனால் காருக்குள் இருந்த குமார், சிறுமி நந்தினி படுகாயத்துடன் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து குன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை யில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, 9-வது வளைவு அருகே உள்ள பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலியானார்கள். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. இதில் இருந்த மாணவ-மாணவிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த நிலையில் தற்போது 90 அடி பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி சிறுமி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருவதால் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வேகத்தடை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.