கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது
செஞ்சி அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது போலீஸ் தீவிர விசாரணை
செஞ்சி
செஞ்சி அருகே உள்ள பரதன்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு மகன் சுதாகர்(வயது 25). இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். சுதாகர் நேற்று முன்தினம் காரை வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு வீட்டில் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்தார். அப்போது காலை சுமார் 9 மணியளவில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுதாகர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் செஞ்சி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், சசுபதி ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இதைப்பார்த்து அந்த வழியாக சென்ற சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் தீயை அணைக்கும் பணியை முடுக்கிவிட்டனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை? நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை என்பதால் காரின் மீது பட்டாசு ஏதேனும் விழுந்து வெடித்து தீ விபத்து நிகழந்ததா? அல்லது கார் என்ஜீன் கோளாறால் தீ விபத்து நிகழ்ந்ததா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.