விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: உதவி சூப்பிரண்டு உள்பட 13 போலீசார் கோர்ட்டில் ஆஜர்


விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: உதவி சூப்பிரண்டு உள்பட 13 போலீசார் கோர்ட்டில் ஆஜர்
x

நெல்லை மாவட்டம் அம்பை உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார் எழுந்தது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் அம்பை உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், அப்போதைய அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் உள்ளிட்ட 14 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்தனர். கடந்த 15-ந் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜராகிய பல்வீர்சிங் உள்ளிட்ட 14 போலீசாருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை நேற்றைய தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன்படி பல்வீர் சிங் உள்ளிட்ட 13 போலீசாரும் நேற்று நெல்லை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜரானார்கள். குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி தரப்பில் அவரது வக்கீல் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ஆறுமுகம், விசாரணையை அடுத்த மாதம் (ஜனவரி) 10-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

1 More update

Next Story