அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
x

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டு மனு மீது சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சென்னை,

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்று ஜேசிடி.பிரபாகர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மேல முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பன்னீர்செல்வம் அணியினர் தரப்பு வழக்கறிஞர்கள், "கட்சியில் தற்போது புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கிறது.தங்கள் தரப்பைச் சேர்ந்த ஆதரவாளர்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம். எனவே, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று வாதிட்டனர்.

இடைப்பட்ட காலத்தில் கட்சியில் எடுக்கப்படும் முடிவுகள், இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்குகளின் இறுதி விசாரணையை ஏப்ரல் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அதிமுக சார்பில் ஏப்ரல் 16ம் தேதி செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென ஓபிஎஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி முறையிட்டார்.

இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதிகள் அதிமுக பொது செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் இன்று விசாரிக்கின்றனர்.


Next Story