காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்
அன்னங்குடி, திருமணி, விழுந்தாக்கால் ஊராட்சிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கே.வி.குப்பம் ஒன்றியக்குழு கூட்டத்தில் வளியுறுத்தப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் லோ.ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த.கல்பனா, பெ.மனோகரன், மாவட்ட கவுன்சிலர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் பா.வேலு வரவேற்றார். இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தேவரிஷிகுப்பம் உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் 2022-23-ம் ஆண்டிற்கான தொகுப்பு வீடுகள் இதுவரை ஒதுக்கப்படவில்லை. கவசம்பட்டு, வேப்பங்கநேரி ஆகிய பகுதிகளுக்கு சமுதாயக்கூடம் கட்டவேண்டும், வேப்பங்கநேரியில் மண்சாலைகளை சிமெண்டு சாலைகளாக தரம் உயர்த்த வேண்டும்.
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம்
கே.வி.குப்பம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, பழுதடைந்த அங்கன்வாடி மையக்கட்டிடம் ஆகியவற்றைப் பழுது நீக்க வேண்டும். பனமடங்கி பஞ்சாயத்தில் உள்ள ராமாபுரத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட இடம்ஒதுக்கித் தரவேண்டும். அன்னங்குடி, திருமணி, விழுந்தாக்கால் ஆகிய ஊராட்சிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டு உறுப்பினர்கள் பேசினர்.
இவற்றிற்கு பதில் அளித்துப் பேசிய தலைவர் உங்கள் கோரிக்கைகளை திட்ட மதிப்பீடாக தயார் செய்து அனுப்பவும். கே.வி.குப்பம் ஒன்றியத்திற்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டுவர, அனைத்து உறுப்பினர்களும் அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து பேசவேண்டும் என்றார்.