தமிழகத்தில் புதிதாக 11 நர்சிங் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி -அமைச்சர் பேட்டி


தமிழகத்தில் புதிதாக 11 நர்சிங் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி -அமைச்சர் பேட்டி
x

தமிழகத்தில் புதிதாக 11 நர்சிங் கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை,

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர்கள், நர்சிங் பயிற்சி பள்ளி முதல்வர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், மாநகராட்சி நல அலுவலர்களுடன் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூடுதல் கட்டிடங்கள்

கூட்ட முடிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நமக்கு நாமே திட்டத்தின் மூலம் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கூடுதல் கட்டிடங்கள் கட்டவும், தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பொருத்த ரூ.10.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய டாக்டர்கள் தேர்வு

708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் கட்டும் பணிகளில் 500-க்கும் மேற்பட்ட கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதில், 500 ஆஸ்பத்திரிகள் முதல்-அமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்பட இருக்கிறது.

இந்த ஆஸ்பத்திரிகளுக்கு தேவையான டாக்டர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்களை மாவட்ட சுகாதார அமைப்பு என்கின்ற அமைப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

11 புதிய நர்சிங் கல்லூரி

ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் 8 கிலோ மீட்டர் நீளத்திற்கான சாலைகளை தேர்ந்தெடுத்து இருபுறமும் மரங்களை நட்டு மக்கள் தினந்தோறும் நடை பயிற்சியினை மேற்கொள்வதற்கு ஏதுவாக தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு சார்பில் 6 நர்சிங் பயிற்சி கல்லூரியும், 25 நர்சிங் பயிற்சி பள்ளியும் உள்ளது. தமிழ்நாட்டிற்கு தலா 100 இடங்களுடன் 11 புதிய நர்சிங் பயிற்சி கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த கல்லூரிகள் கட்டுவதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story