விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டி
விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
திட்டக்குடி,
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தயா தமிழன், திராவிடமணி, கிட்டு, செங்குட்டுவன், ராமகிருஷ்ணன், கவுதமன், முருகையன், குமார் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மக்கள் நகைக்கிறார்கள்
அண்ணாமலை விளையாட்டுத்தனமான அரசியல் செய்வதாக மக்கள் நகைக்கிறார்கள். ஏற்கனவே தி.மு.க.வின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி சொத்து பட்டியலை வெளியிட்டார். அதுவே நகைப்புக்குரியதாக மாறியது.
அவர் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் அரசியல் விளையாட்டை அரங்கேற்றிக் கொண்டுள்ளார். ஊடக வெளிச்சத்தில் தன்னை முன்னிறுத்த ஆர்வம் காட்டுகிறார்.
அச்சம் தருவதாக உள்ளது
பொது சிவில் சட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்க்கிறது. தேசிய கல்விக்கொள்கை சனாதனத்துக்கு பெரும் அச்சம் தருவதாக உள்ளது. தற்பொழுது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுக்கு மோடி அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். ஆதிதிராவிடர் பள்ளியில் கல்வி மேலாண்மைக்குழு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.