மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சகம் செய்யும்-மதுரையில் வைகோ பேட்டி


மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சகம் செய்யும்-மதுரையில் வைகோ பேட்டி
x

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சகம் செய்யும் என மதுரையில் வைகோ கூறினார்.

மதுரை

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சகம் செய்யும் என மதுரையில் வைகோ கூறினார்.

மதுரை வருகை

மதுரையில் நடந்த ம.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, சென்னையில் இருந்து ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் மதுரை 44- வது வார்டு கவுன்சிலர் தமிழ்செல்வி மாயழகுவின் பேரனுக்கு கரிகாலன் ஆதித்யன் என்று பெயர் சூட்டினார். இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரெயில்வே துறை வரலாற்றிலே மிக கோர விபத்து ஒடிசாவில் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், தொழில்நுட்ப கோளாறா அல்லது சதி வேலையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படி சதி வேலையாக இருக்குமானால் அதை செய்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தண்டனை

ரெயில் பயணம் ஆபத்தை உண்டாக்கும் என்கிற பயத்தை உண்டாக்கி இருக்கிறது. இந்த சூழலில் இதை தீவிரமாக ஆய்வு செய்து உண்மையான காரணத்தை கண்டுபிடித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.

ரெயில் விபத்தில், மீட்பு நடவடிக்கையாக தமிழக அரசு துரிதமாக செயல்பட்டது. தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளை அனுப்பி வைத்து உடனடியாக தேவையான காரியங்களை செய்து மீட்பு பணிகளை தமிழக அரசு பாராட்டக்கூடிய வகையில் செய்திருக்கிறது.

மேகதாது அணை விவகாரம்

மேகதாது அணை பிரச்சினைக்காக 12 வருடத்திற்கு முன்பாகவே ஆயிரம் பேரை திரட்டி நான் போராட்டம் நடத்தினேன். அப்போதே மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு பணமும் ஒதுக்கப்பட்டுவிட்டது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மத்திய அரசு அதை வேடிக்கை பார்க்கும். அது தமிழகத்திற்கு பெரும் கேடாக முடியும். கிருஷ்ணராஜசாகரில் தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் பஞ்ச பிரதேசமாக ஆக்கப்படும். இது நமது தலைக்கு மேலே கத்தி போல தொங்கி கொண்டிருக்கும் பெரிய ஆபத்து. மத்திய அரசு இதில் வஞ்சகம் செய்யும் என்பதுதான் என் குற்றச்சாட்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது பூமிநாதன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் முனியசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story