பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை மத்திய அரசு விரைவில் தீர்க்கும்
பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை மத்திய அரசு விரைவில் தீர்த்து வைக்கும் என்று சிவகாசிக்கு வந்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
சிவகாசி,
பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை மத்திய அரசு விரைவில் தீர்த்து வைக்கும் என்று சிவகாசிக்கு வந்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
பட்டாசு தொழில்
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சிவகாசியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகாசியின் வாழ்வாதாரமாக உள்ள பட்டாசு தொழிலுக்கு அதிகளவில் பிரச்சினைகள் உள்ளது. சிலர் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையில் தற்போது சில விதிமுறைகளுக்கு உட்பட்டு சிவகாசி ஆலைகளில் பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
பட்டாசு ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக தமிழக பா.ஜ.க. உள்ளது. கடந்த தீபாவளியின் போது அதிக அளவில் பட்டாசுகளை வாங்கி வெடிக்க, பொது மக்களிடம் நான் கூறினேன். அதையும் சிலர் குறை கூறினார்கள்.
ஏற்றுக்கொள்ள முடியாது
சில வெளிநாடுகளில் பட்டாசுகளை வெடிக்க சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்தியாவிலும் கலாசாரம் சார்ந்த விழாக்களின் போது பட்டாசு வெடிக்க சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும். நேரக்கட்டுப்பாடு கூடாது. 2 ஆயிரம் ஆண்டுகளாக பட்டாசுகளை வெடித்து வருவதாக வரலாற்று சான்று இருக்கிறது. பட்டாசு வெடிப்பதன் மூலம் தான் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை மத்திய அரசு விரைவில் தீர்த்து வைக்கும். இந்த பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்களை மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச ஏற்பாடு செய்தேன். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 இடங்களை கைப்பற்றும் என்று கூறி வருகிறது. ஆனால் விலைவாசி உயர்வால் வாக்காளர்கள் மத்தியில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
நாளுக்கு நாள் அதிருப்தி அதிகமாகி கொண்டு இருக்கிறது. 15 இடங்களை கூட தி.மு.க. கூட்டணியால் கைப்பற்ற முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.