பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி: சான்றிதழ் சரிபார்ப்பில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பா? தமிழக தேர்வர்கள் அதிர்ச்சி


பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி: சான்றிதழ் சரிபார்ப்பில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பா? தமிழக தேர்வர்கள் அதிர்ச்சி
x

கோப்புப்படம்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 1,060 விரிவுரையாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது.

சென்னை:

பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் 1,060 விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. கணினி வழி தேர்வாக கடந்த டிசம்பர் மாதம் 8-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டது.

அதன்படி தேர்வு எழுதிய தேர்வர்களில் விகிதாச்சார அடிப்படையில் 2 ஆயிரத்து 148 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் தமிழக தேர்வர்களைத் தவிர வெளிமாநிலத்தைச் சேர்ந்த சில தேர்வர்களும் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் அவர்களுக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் என்று அரசு அறிவித்தாலும், அதற்கு முறையான அரசாணை வெளியிடாததால் தான் இதுபோன்று வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்கிறார்கள் என்று தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


Next Story