இளம்பெண்ணின் ஆசைவார்த்தையில் மயங்கி சென்ற முதியவரிடம் செயின் பறிப்பு


இளம்பெண்ணின் ஆசைவார்த்தையில் மயங்கி சென்ற முதியவரிடம்  செயின்  பறிப்பு
x
தினத்தந்தி 21 Oct 2022 12:15 AM IST (Updated: 21 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

இளம்பெண்ணின் ஆசைவார்த்தையில் மயங்கி சென்ற முதியவரிடம் செயின் பறிப்பு

கோயம்புத்தூர்


ஹலோ எப்படி இருக்கிங்க... உங்களை பார்த்து ரொம்ப நாட்கள் ஆச்சு... வயது ஆனாலும் நீங்கள் ரொம்ப ஸ்மார்ட்டா, அழகாக இருக்கிங்க... உங்களைபோல யாரையும் பார்த்ததில்லை....

என்னை அடையாளம் தெரியவில்லையா... நான் உங்கள் வீட்டின் அருகே வசித்து வந்தேன்... உங்களை அடிக்கடி பார்த்திருக்கிறேன்... என்று இனிமையான குரலில் இளம்பெண்ணிடம் இருந்து கோவையை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவருக்கு செல்போனில் வந்த அழைப்பின் பகிர்வுதான் இந்த தகவல்.

முதியவரிடம் ஆசைவார்த்தை

ஆம் கோவை சிட்ராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இவரது செல்போனுக்கு வந்த அழைப்பில் இளம்பெண் ஒருவர் இனிமையான குரலில் பேசினார். இளசுகளே மயங்கும் அந்த குரலில் முதியவரும் சிக்கினார். சபலத்தின் பிடியில் சிக்கிய அந்த முதியவர் இளம்பெண்ணிடம் கொஞ்சி, கொஞ்சி பேச ஆரம்பித்தார்.

ஆசைவார்த்தைகளை அள்ளி வீசிய அந்த பெண் ஒரு கட்டத்தில் உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. நீங்கள் தனியாக வந்தால் எங்காவது போய் பேசிக்கொண்டு, ஜாலியாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் நீங்கள் என்னை சந்திக்க வரும்போது, அழகாக மேக்கப்போட்டு, செயின் அணிந்து வரவேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.

டிப்டாப் உடை அணிந்து கிளம்பினார்

இதனை நம்பிய அந்த முதியவர் டிப்டாப்பாக உடை அணிந்து, ஒரு இளைஞரை போல மேக்கப் செய்து கொண்டு, வீட்டில் இருந்த 5 பவுன் செயினை கழுத்தில் போட்டுக்கொண்டு இளம்பெண்ணை சந்திக்க தனது மோட்டார் சைக்கிளில் பல கனவுகளுடன் புறப்பட்டார்.

இதையடுத்து அந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்டு எங்கு வரவேண்டும் என்று முதியவர் கேட்டுள்ளார். அப்போது அந்த இளம்பெண் தான் துடியலூர் சந்திப்பில் நிற்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அங்கு சென்ற முதியவர் இளம்பெண்ணை பார்த்து, கொஞ்சி, கொஞ்சி பேசியுள்ளார். இளம்பெண்ணின் அழகில் உருகிபோன அந்த முதியவர் இளம்பெண் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டி, சிரித்து சிரித்து விழுந்துள்ளார்.

5 பவுன் நகை பறிப்பு

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த இளம்பெண், ஜாலியாக இருக்கலாம் வாங்க என்று முதியவரை அழைத்துக்கொண்டு கரட்டுமேடு பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு சென்றார்.

அப்போது அங்கு 2 வாலிபர்கள் பேசிக்கொண்டிருந்தனர். திடீரென அதில் ஒருவர், முதியவரை பிடித்து நீ யார்? என் மனைவியுடன் இங்கே என்ன செய்கிறாய். என்று கூறி இருவரையும் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துள்ளார்.

பின்னர் அந்த புகைப்படத்தை காட்டி இதை உன் மனைவி மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி விடுகிறேன் என்று கூறி மிரட்டியுள்ளார். வெளியே தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் என்று நினைத்த அவர் அவர்களிடம் கெஞ்சியதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் முதியவரின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகை மற்றும் அவரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு, அவரை விரட்டிவிட்டனர்.

போலீசார் விசாரணை

இளம்பெண் ஆசைவார்த்தை காட்டி அழைத்து வந்து நகை, பணத்தை பறித்து சென்றது முதியவருக்கு தெரியவந்தது. இதுகுறித்து அந்த முதியவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியவரை மிரட்டி நகை, பணம் பறித்த மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவையில் இளம்பெண் ஒருவர் முதியவரிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று தனது கூட்டாளிகளுடன் நகை, பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story