'செஸ் ஒலிம்பியாட்' போட்டி உலகமே வியக்கும் வகையில் நடைபெறும் - அமைச்சர் மெய்யநாதன் பேட்டி


செஸ் ஒலிம்பியாட் போட்டி உலகமே வியக்கும் வகையில் நடைபெறும் - அமைச்சர் மெய்யநாதன் பேட்டி
x

செஸ் ஒலிம்பியாட் போட்டி உலகமே வியக்கும் வகையில் நடைபெறும் என்று அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கூறினார்.

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை அருகில் உள்ள மாமல்லபுரத்தில் அடுத்த மாதம் (ஜூலை) 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடக்கிறது. செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் போட்டிக்காக மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் கார்த்திகேயன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையினால் செஸ் ஒலிம்பியாட் போட்டி இதுவரை எந்த நாட்டிலும் இது போன்று நடத்தப்படவில்லை என உலகமே வியக்கும் வகையில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெல்லியில் இப்போட்டிக்கான ஜோதி தொடர் ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஜோதி 75 முக்கிய நகரங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு ஜூலை 28-ந் தேதி தமிழக முதல்-அமைச்சரிடம் போட்டி நடைபெறுகின்ற விளையாட்டு அரங்கத்தில் வைத்து வழங்கப்படவுள்ளது.

இப்போட்டிக்காக சர்வதேச தரத்திலான 52 ஆயிரம் சதுர அடி பரப்பிலான நவீன விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஏற்கனவே உள்ள 22 ஆயிரம் சதுர அடி பரப்பிலான அரங்கமும் நவீனப்படுத்தப்படுகிறது. இதில் விளையாட்டு வீரர்களுக்காக 500 செஸ் போர்டுகள் அமைக்கப்படவுள்ளது.

இப்போட்டி நடைபெறுவதையொட்டி பொதுப்பணித்துறை மூலம் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது. மின் வாரியம், போக்குவரத்து, சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகள் மூலம் பணிகளை மேற்கொள்ள 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழுவை முதல்-அமைச்சர் அமைத்துள்ளார்.

187 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து 4 அணிகள், பிற நாடுகளிலிருந்து 227 அணிகள் பங்கேற்கவுள்ளன. வீரர்களின் நலன் கருதி சுகாதாரமான உயர்தர நட்சத்திர ஓட்டல்களில் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மருத்துவத்துறை மூலம் மேற்கொள்ளப்படும்.

முதல்-அமைச்சர் இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு 15 நாட்களுக்கான ரூ.2 லட்சம் காப்பீடு வசதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story