கோழிப்பண்ணைக்குள் மழைநீர் புகுந்து 3,000 கோழிகள் செத்தன
சூளகிரி அருகே கோழிப்பண்ணைக்குள் மழைநீர் புகுந்து 3,000 கோழிகள் செத்தன. மேலும் நர்சரியில் இருந்த செடிகளும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.
சூளகிரி
கனமழை
கிருஷ்ணகிரி மாவட்டம் குளகிரி பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதில், மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும், குளகிரி கீழ்த்தெருவில் உள்ள சிவன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. இந்த கனமழை காரணமாக சூளகிரி அருகேயுள்ள அட்டகுறுக்கி ஏரி முழுவதுமாக நிரம்பியது.
இதனைத்தொடர்ந்து மழைநீர் அருகில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகளிலும் புகுந்தது. காமன்தொட்டி பக்கமுள்ள ரவுத்பள்ளி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் ரூ.2½ லட்சம் மதிப்பிலான 3,000 கோழிகள் செத்தன.
அதிகாரிகள் உறுதி
மேலும் கோழிப்பண்ணைக்கு அருகில் உள்ள நர்சரியில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள செடிகள், நாற்றுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த சூளகிரி தாசில்தார் அனிதா மற்றும் அதிகாரிகள் நேற்று அங்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.