அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் நோக்கம்
தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் நோக்கம் என்று மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு, மேற்பார்வைக்குழு கூட்டத்தில் குழு தலைவர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. என்று பேசினார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் நோக்கம் என்று மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு, மேற்பார்வைக்குழு கூட்டத்தில் குழு தலைவர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. என்று பேசினார்.
ஒருங்கிணைப்பு, மேற்பார்வைக்குழு கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குழுத்தலைவர் சி.என்.அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். அது மட்டுமில்லாமல் தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் திறன்பட செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் அனைத்து திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் நோக்கம். எனவே அரசு அலுவலர்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
அதேபோல் விவசாய மக்களுக்கு அரசுத்துறையில் அரசு அறிவிக்கும் திட்டங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள விளம்பர தகவல் பலகை வைக்க வேண்டும்.
மேலும் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் அடங்கல் பெற்றுக்கொள்வதற்கு இ-சேவை மூலம் 10 லட்சம் இ-பதிவுகள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயக்கப்பட்டு 98 சதவீதம் வருவாய்த் துறையின் மூலம் இலக்கு எட்டப்பட்டுள்ளது.
போளூர் ரெயில்வே மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருவதை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனி கவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
திராவிட மாடல் அரசு
செங்கம் மருத்துவமனையில் கூடுதல் மருத்துவ கட்டிடம் கட்ட இதற்கு முன்னதாக இருந்தவர்கள் எவ்வித பணிகளும் மேற்கொள்ளவில்லை
ஆனால் முதல்-அமைச்சர் 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.40 ஆயிரம் கோடி மருத்துவ துறைக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
திருவண்ணாமலை மாட்டத்தில் 18 வட்டங்கள் உள்ளன. 8 சட்டமன்ற தொகுதிகள், 2 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. முதல்-அமைச்சர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வழங்கி மாவட்டத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்து செல்கிறார்.
எப்போழும் திராவிட மாடல் அரசு மக்களின் நலன் கருதியே செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம், மத்திய அரசின் வேளாண் வளர்ச்சி திட்டம், தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தமிழ்நாடு மாநில வாழ்வாத இயக்கம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி வேலை வாய்ப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம், பிரதம மந்திர கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
போளூர் ரெயில்வே மேம்பாலம்
கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கை வைத்து பேசியதாவது:-
போளூர் ரெயில்வே மேம்பாலம் பணி 85 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மேம்பாலம் பணியை முடித்து தருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோல் போளூர் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் வசூரில் இருந்து அரசு மருத்துவமனை வரை புறவெளி சாலைவை விரைந்து அமைத்து தர வேண்டும்.
போளூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். பெரிய கொழப்பலூர் அரசு மருத்துவமனையில் முறையாக டாக்டர்கள் வராமல் பராமரிப்பின்றி உள்ளது. அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றி அமைக்க வேண்டும்.
ஆரணி எஸ்.வி. நகரம் - முருகம்பூண்டியை இணைக்கும் கமண்டல நாகநதியில் ஆற்று பாலம் கட்ட வேண்டும். ஆரணி நகரில் சுற்று வட்ட பாதை அமைக்க வேண்டும்.
ஆரணி நகரின் மத்தியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.
நேற்று நடைபெற்ற ஆரணி நகராட்சி கூட்டத்தில் சூரியகுளம் தொடர்பான விவாதத்தின் போது நகராட்சி பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக பேசியுள்ளார். இதனை கவனத்தில் கொண்டு வருகிறேன். இதுகுறித்து கலெக்டர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாவட்ட வன அலுவலர் அருண்லால், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், செயற்பொறியாளா (வளர்ச்சி) ராமகிருஷ்ணன், உதவி கலெக்டர்கள் ஆர்.மந்தாகினி, ஆர்.தனலட்சுமி மற்றும் ஒன்றிய குழுத்தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.